×

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் உற்பத்தியை அதிகரிக்க ₹50 கோடியில் தானியங்கி இயந்திரம்

*பக்தர்கள் சிரமமின்றி மகா அங்கபிரதட்சனம் செய்ய ஏற்பாடு

*டயல் யுவர் இஓ நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தகவல்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் உற்பத்தியை அதிகரிக்க ₹50 கோடியில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களுக்கு சிரமமின்றி மகா அங்கபிரதட்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்று டயல் யுவர் இஓ நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தெரிவித்தார். திருமலை அன்னமய்யா பவனில் டயல் யுவர் செயல் அலுவலர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து போனில் பக்தர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு செயல் அதிகாரி தர்மா பதில் அளித்தார்.

போனில் பேசிய விவரம் பின்வருமாறு:
பக்தர்: தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியவில்லை. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும்.

செயல் அலுவலர்: பல பக்தர்கள் ஆன்லைனில் ஒரே நேரத்தில் அறைகள் முன்பதிவு செய்கின்றனர். எனவே நீங்களும் முயற்சி செய்யவும். நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை பயோமெட்ரிக் நுழைவு மூலம் அனுமதிக்கப்படுகிறது.

பக்தர்: கழிவறைகளின் தூய்மை சரியில்லை. நந்தகத்தில் உள்ள கல்யாணகட்டாவில் தூய்மை சரியில்லை.

செயல் அலுவலர்: தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்ததால் பிரச்னை ஏற்பட்டது. உடனடியாக மாற்று பணியாளர்களை ஏற்பாடு செய்து, சுகாதாரத்தை முறையாக பராமரித்து வருகிறோம்.

பக்தர்: திருமலையில் அறைகளை பயன்படுத்தி காலி செய்த பின்னர் 2 மாதங்கள் ஆகியும் முன்வைப்பு தொகை இதுவரை திரும்பப் வரவில்லை.
செயல் அலுவலர்: பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக சமீபத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை. மீண்டும் ஒருமுறை வங்கிகளைத் தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பப் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள்: கோவிட் காலத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக அர்ச்சனை, தோமாலை தரிசனத்தில் அனுமதிக்க வேண்டும்.

செயல் அலுவலர்: கோவிட் நேரத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மீண்டும் அந்த சேவையில் அனுமதிக்க முடியாது. தோமாலை மற்றும் அர்ச்சனா போன்ற சேவைகளுக்கு லக்கிடிப்பை (குலுக்கல்) முயற்சிக்கவும்.

பக்தர்: மே மாதம் திருமலைக்கு வந்தோம். வெயிலின் வெப்பத்தால் சாலையில் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. செயல்அலுவலர்: கோடை காலத்தில் ஏழுமலையான் கோயில் நான்கு மாட வீதிகளில் தேவையான இடங்களில் கூல் பெயின்ட், தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளது. அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறோம். ஏதேனும் பிழைகள் இருந்தால் சரி செய்யப்படும்.

பக்தர்: தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அறைகளில் பணம் கேட்கின்றனர்.

செயல் அலுவலர்: பக்தர்களிடம் பணம் கேட்கும் தேவஸ்தான ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தூய்மை பணியாளர்களிடம் பக்தர்களும் பணம் கொடுக்க வேண்டாம்.

பக்தர்: அலிபிரியின் நடைபாதையில் உள்ள தூண்களில் கோவிந்த நாமாவளி எழுதி வைத்தால் நடந்து செல்பவர்கள் அதனை படித்து செல்வார்கள்.

செயல் அலுவலர்: அலிபிரி நடைபாதை புனரமைக்கப்பட்டுள்ளது. புதிய தூண்களில் கோவிந்த நாமாவளி எழுதப்படும்.

பக்தர்: பக்தர்கள் கூட்டம் இல்லாவிட்டாலும், நீண்ட தூரம் வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.

செயல் அலுவலர்: பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து, பக்தர்கள் வரிசைக்குள் செல்லும் வழியை மாற்றி அமைக்கப்படுகிறது.

பக்தர்: ஏழுமலையான் கோயில் வெளிப்புற மகா அங்க பிரதட்சனம் செய்யும் இடத்தில் திருமாலநம்பி சன்னதி வாசலில் கேட் போடப்பட்டுள்ளதால் சிரமமாக உள்ளது. இரவில் தெப்பக்குளம் மூடிவிடுகிறார்கள் இதனால் புனித நீராட முடியவில்லை.

செயல் அலுவலர்: மகா அங்கபிரதட்சனை செய்யும் பக்தர்களுக்கு நீராடுவதில் சிரமம் ஏற்படாத வகையில், தெப்பகுளம் இரவில் திறந்து வைக்கப்படும். திருமலை நம்பி கோயில் சன்னதி அருகே கேட் இல்லாமல் செய்யப்படும்.

பக்தர்: ₹300 டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

செயல்அலுவலர்: சரிபார்த்து தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் உறுதி செய்யப்படும்.

பக்தர்: லட்டு தரம் சரியில்லை. அன்னதானத்தில் அரிசியின் தரம் சரியில்லை.

செயல் அலுவலர்: லட்டு தயாரிக்க தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். லட்டு பிரசாதம் தேவை அதிகரித்து வருவதால் லட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் ₹50 கோடியில் ரிலையன்ஸ் உதவியுடன் ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் தயார் செய்யப்பட உள்ளது. அவை வந்தால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறந்த தரத்திற்கான பரிந்துரைகளை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது என்றார்.

கூடுதலாக 2 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லட்டு தயாரிக்கப்படுகிறது. அந்த லட்டுகள் சிறிது உலர வைத்தால் அதன் தரம் உயரும் ஆனால் உடனுக்குடன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதம் உலரவைக்க சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். அப்போது அதன் நிலுவை தன்மை தரம் மேலும் அதிகரிக்கும். லட்டு பிரசாதம் தேவை அதிகரித்து வருவதால் லட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ₹50 கோடியில் தானியங்கி இயந்திரம் வாங்கப்படுகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் லட்டு தயாரிக்க இந்த இயந்திரம் மூலம் தயார் செய்யப்பட உள்ளது. அவை வந்தால் கூடுதலாக 2 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் சிறந்த தரத்தை பராமரிக்க வேண்டும் என லட்டு தயார் செய்யும் ஸ்ரீ வைஷ்ண ஊழியர்களுக்கும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது என்று செயல் அலுவலர் தர்மா தெரிவித்தார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம் உற்பத்தியை அதிகரிக்க ₹50 கோடியில் தானியங்கி இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Esummalayan temple ,Tirumala ,Latdu Prasad ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!